ஜமால் கொலையில் சவுதி இளவரசர் உத்தரவிட்டார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை சிஐஏ தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் பத்திரிகையாளர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியாழக்கிழமை சந்தித்தார். அதில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுத் துறை என்ன நிலைப்பாடு வைத்துள்ளது என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”ஜமாலை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான் கொல்ல உத்தரவிட்டதாகக் கூறினார் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்த இறுதி முடிவுக்கு அவர்கள் இன்னும் வரவில்லை. இந்தக் குற்றச்சாட்டை பிறரால் நிரூபிக்க முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து உலக நாடுகளிடையே சவுதி இளவரசர் சல்மானுக்கு எதிராக விமர்சனங்கள் ஏழ, மீண்டும் தனது ஆதரவை சவுதிக்கு அளித்திருக்கிறார் ட்ரம்ப் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, சவுதி அரசாங்கத்தின் கடும் விமர்சகரான பத்திரிகையாளர் கஷோகி, கடந்த அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களை எடுத்துவர துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சென்றபோது அங்கு சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.
இவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் கஷோகி இறந்ததாக சவுதி கூறிவந்தது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, என்றும் இக்கொலையில் இளவசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறி ஆதாரங்களை வெளியிட்டதுடன் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி குற்றம் சாட்டியது.
ஆனால் சவுதி இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்தக் கொலை வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று சவுதி கூறி வருகிறது.
இந்நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவுதியால் கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க சவுதி ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.