அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத் தின் (நாசா) இன்சைட் என்ற ரோபோ விண்கலம், சுமார் 7 மாத பயணத்துக்குப் பிறகு திட்டமிட்டபடி நேற்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
செவ்வாய் கிரக தரைப்பரப்பின் உள்பகுதியை ஆய்வு செய்வதற்காக இன்சைட் என்ற ரோபோ விண்கலத்தை நாசா வடிவமைத்தது. இது அட்லஸ் வி 401 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டென் பெர்க் விமானப்படை தளத்திலிருந்து கடந்த மே 5-ம் தேதி ஏவப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி நாசா விஞ் ஞானிகள் இதைக் கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 48.5 கி.மீ. தூரத்தை சுமார் 7 மாதங் களாக பயணம் செய்த இந்த விண்கலம், திட்டமிட்டபடி நேற்று அதிகாலையில் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது. இதையடுத்து, கட்டுப்பாட்டு மையத்திலிருந்த நாசா விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கைகுலுக்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எலிசியம் பிளனிசியா என்ற இடத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம், தனது முதல் படத்தை எடுத்து நாசாவுக்கு அனுப்பி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அந்தப் படம் தெளிவாக இல்லை. இது தினமும் சூரிய ஒளியிலிருந்து தனது பேட்டரியை ரீசார்ஜ் செய்துகொண்டு செயல்படும். வரும் 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதிவரை செயல்பாட்டில் இருக்கும்.
இதுகுறித்து இன்சைட் ட்விட்டர் பக்கத்தில், “நீண்ட பயணத்துக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி உள்ளேன். என்னுடைய சோலார் பேனல்கள் விரிந்து சூரிய ஒளியிலிருந்து எரிசக்தியை பெறுகிறேன்” என பதிவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசா நிர்வாகி ஜிம் பிரைடென்ஸ்டைன் கூறும்போது, “மனித வரலாற்றில் 8-வது முறையாக நாங்கள் இன்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்துள்ளோம். முதலில் சந்திரனுக்கும் பிறகு செவ்வாய் கிரகத்துக்கும் விஞ்ஞானிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக செவ்வாய் கிரகத்தின் உள்பகுதியை இன்சைட் விண்கலம் ஆய்வு செய்து, முக்கிய தகவல்களை எங்களுக்கு வழங்கும். இது மனிதர்களை அனுப்புவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.
செவ்வாய் கிரகத்தில் உருவாகும் அதிர்வுகள் பற்றியும் தரையில் துளையிட்டு உட்புற வெப்ப பரிமாற்றங்கள் பற்றியும் இந்த விண்கலம் முதற்கட்டமாக ஆய்வு செய்யும். பின்னர் தண்ணீர் உள்ளதா என்றும் ஆய்வு செய்யும்.