மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி வழங்கிய கவுரவ விருதை திரும்ப பெறுவதாக சர்வதேச மனித உரிமைக்களுக்கான தொண்டு நிறுவன அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் நைடோ கூறும்போது, ‘‘நீங்க இன்று நம்பிக்கை, தைரியம், மனித உரிமைகளுக்கான போராடுபவர் என்ற அடையாளங்கள் இல்லாமல் நீங்கள் தற்போது இருப்பதை கண்டு நாங்கள் வருத்தத்தில் உள்ளோம்.
தொடர்ச்சியாக ரோஹிங்கியா விவகாரத்தில் உங்களது நிலைப்பாட்டை ஆம்னெஸ்டி ஆதரிக்காது. மிகுந்த வருத்தத்துடன் உங்களது அளித்த கவுரவ விருதை திரும்ப பெறுகிறோம்” என்று கூறியுள்ளது. இந்த கவுரவ விருதை ஆம்னெஸ்டி 2007 ஆம் ஆண்டு சூச்சிக்கு வழங்கியது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த மோதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது.
இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த விவகாரம் தொடர்பாக ஆங் சான் சூச்சிக்கு உலக அரசியலில் அவப் பெயர் உருவாகியுள்ளது.
முன்னதாக 2007-ம் ஆண்டு கனடா அரசின் கவுரவ குடியுரிமைப் பட்டம் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ரோஹிங்கியா விவகாரத்தை சுட்டிக் காட்டி கனடா திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.