உலகம்

இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அண்மையில் நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்ச தோல்வியைத் தழுவினார்.

வாக்கெடுப்பு முடிவை ஏற்க மறுக்கும் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அப்போது மின்னணு முறை அல்லது பெயர் வாரியாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அதிபர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நேற்று கூடியது. சபாநாயகர் கரு ஜெயசூர்யா அவைக்கு வரவில்லை. ஆனந்த குமாரசிறி அவையை வழிநடத்தினார். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அவை நடைபெற்றது. வரும் 23-ம் தேதிக்கு நாடாளுமன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஆனந்த குமாரசிறி அறிவித்தார்.

இலங்கை அரசியல் குழப்பத்துக்கு இதுவரை தீர்வு காணப்படாததால் தலைநகர் கொழும்பு உட்பட அந்த நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT