உலகம்

இந்தோனேசிய விமான விபத்தில் பலியான காதலனின் ஆசையை நிறைவேற்றிய காதலி

செய்திப்பிரிவு

''கடைசியாக என்னிடம் ரியோ தொலைபேசியில் பேசும்போது  நான் திருமணத்துக்குத் தாமதமாக வந்தால் திருமண ஆடையை அணிந்துகொண்டு அந்தப் புகைப்படத்தை எனக்கு அனுப்பு'' என்று  தனது இறந்த காதலனை நினைவுகூர்கிறார் இன்டன் சியாரி .

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பலியாகினர். இவர்களின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த விமான விபத்தில் பலியானவர்தான் ரியோ நந்தா பிரதாமா.

இன்டனுக்கும், ரியோவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்கவிருந்த நிலையில் ரியோ விமான விபத்தில் மரணமடைந்தார்.

இந்த  நிலையில் தனது காதலன் தன்னிடம் கூறிய வார்த்தைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண ஆடை அணிந்து  தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து இன்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, ''ரியோ எனது முதல் காதலர். நாங்கள் சுமார் 13 வருடங்களாகக் காதலித்து வந்தோம். அவர் என்னிடம் ஒருமுறை தான்  திருமணத்துக்கு தாமதமாக வந்தால்  திருமண ஆடை அணிந்து கையில் பூச்செண்டுடன் அதனைப் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பும்படி கூறியிருந்தார். அவர் விளையாட்டாகத்தான் கூறினார். என்னால் தற்போது உள்ள உணர்வை விவரிக்க முடியவில்லை.

நான் உனக்காகச் சிரிக்கிறேன் ரியோ. நான் சோகமாக இருக்க மாட்டேன். நீ எப்போதும் என்னைத் தைரியமாக இருக்குமாறு கூறுவாய். நான் உன்னைக் காதலிக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT