அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பேரிடர் மீட்புக்குழுவினர் திணறி வருகின்றனர். இதுவரை தீயில் கருகி 60 பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பட்டி கவுண்டி பகுதியில் உள்ள பாரடைஸ் நகரம். இந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில்தான் காட்டுத் தீ கடந்த 8-ம் தேதி முதல் பரவி வருகிறது. காட்டுப் பகுதியில் சிலர் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருந்தபோது, சமையல் செய்வதற்காக மூட்டப்பட்ட நெருப்பு காட்டுப் பகுதியில் உள்ள காய்ந்த மரங்கள் மீது பட்டு பரவிய தீ இன்னும் அணைக்க முடியாமல் தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.
பாரடைஸ் நகரில் ஏறக்குறைய 26 ஆயிரம் பேர் குடியிருந்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரியவருகிறது.
இதுகுறித்த பட்டி கவுன்டி நிர்வாக அதிகாரி கோரி ஹோனியா நிருபர்களிடம் கூறுகையில், ''புதன்கிழமை மாலை வரை பாரடைஸ் நகரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 461 இடங்களில் தேடுதல் நடத்தி இருக்கிறோம். இந்த தேடுதலிலும், தீயை அணைக்கும் முயற்சியும் 3,500 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் பணிக்கு உதவுவதற்காக 22 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுவரை காட்டுத் தீயில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேரைக் காணவில்லை. 60 பேரில் 41 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதம் உள்ளவர்களின் உடல்கள் டிஎன்ஏ மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் காட்டுத் தீ இயற்கையாக உருவாகவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. யாரோ சில விஷமிகள் காட்டுப்பகுதிக்குள் குடில் அமைத்துத் தங்கியபோது, சமையல் செய்வதற்காக மூட்டப்பட்ட தீ பரவி இந்தத் தீவிபத்து நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.
பாரடைஸ் பகுதியில் உள்ள 1,35 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுப் பகுதி உள்ளது. இதில்தான் தற்போது காட்டுத் தீ பரவி அணைக்க முடியாத அளவில் பற்றி எரிந்து வருகிறது. இதுவரை 7,600 வீடுகள், 260 வர்த்தக கட்டிடங்கள், கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. வாஷிங்டன், டெக்சாஸ் மாநிலங்களில் இருந்து 5,600 மேற்பட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.