ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அதிபராக சாலி வோர்க் சீதே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் எத்தியோப்பியாவின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
எத்தியோப்பியாவின் அதிபர் முலாத்து திஷோமே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் சாலி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முலாத்தின் ராஜினாமாவிற்கு எந்தக் குறிப்பிட்ட காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாலி வோர்க் சீதே இதற்கு முன்னர் எத்தியோப்பியாவின் பிரான்ஸ் தூதரகாக இருந்தவர். ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் புலமை மிக்கவர். சாலி அடுத்த ஐந்து வருடங்கள் அதிபர் பதவியில் நீடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எத்தியோப்பியாவில் அதிக அதிகாரம் கொண்டதாக பிரதமர் பதவி உள்ளது. அந்நாட்டின் பிரதமராக அபி அகமத் 2018 முதல் அப்பதவியில் இருந்து வருகிறார். எத்தியோப்பியாவைப் பொறுத்தவரை அங்கு கூட்டுக் கட்சிகளின் ஆட்சி முறை நீடிக்கிறது. இதன் அடிப்படையில் சுழற்சி முறையில் பதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.