பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியில் அங்குள்ள அரசு அலுவலங்களில் பெண்கள் செல்வதற்கு துப்பாட்டா அணிந்து செல்வது கட்டாயம் என்று அறிவுறுத்தப்படுவதால் பெண்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த உத்தரவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் யாஸ்மின் ராஷித் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த உத்தரவால் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை ட்விட்டர் வாசி சிட்ரா பட் வீடியோ மூலம் பகிர்ந்திருக்கிறார்.
அதில் சிட்ரா குறிப்பிட்டிருப்பது, ”அமைச்சரின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற என்னை அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். காரணம் துப்பட்டா அணிந்தால்தான் உள்ளே செல்ல அனுமதிப்பதாகக் கூறினர். அவர்களிடம் இது தொடர்பான உத்தரவு ஆவணத்தைக் காண்பிக்குமாறு கூறினேன் அவர்களிடம் அப்படி ஒன்றும் இல்லை. தொடர்ந்து அந்த அறையில் இருந்த காவலர்கள் துப்பட்டா அணிந்து செல்லுமாறு கூறினார்கள். நான் அவர்களிடம் நான் துப்பட்டா அணிந்து வரவில்லை என்று கூறியதற்கு, வேண்டுமென்றால் நாங்கள் வேறு ஒருவரிடம் கடன் வாங்கித் தருவதாக அவர்கள் கூறினார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
துப்பட்டா அணிந்து செல்லும் இந்தக் கட்டாய உத்தரவைப் பிறப்பித்த பெண் அமைச்சர் யாஸ்மின் ராஷித்துக்கு எதிராகவும் இந்த உத்தரவை எதிர்த்தும் சமூக வலைதளங்களில் பெண்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர்.