அமெரிக்காவின் அலாபாமாவில் 1011.5 பவுண்ட் (459 கிலோ) எடையுள்ள ராட்சத முதலையை மாண்டி ஸ்டோக்ஸ் குடும்பத்தினர் பிடித்து சாதனை படைத்தனர்.
அலாபாமாவின் தாமஸ்டானை சேர்ந்த மாண்டி ஸ்டோக்ஸ் குடும்பத்தினர் முதல் முறையாக வேட்டையாடுவதற்கான உரிமத்தைப் பெற்று, கேம்டன் பகுதியில் உள்ள அலாபாமா நதியில் முதலைகளை பிடிக்கும் முயற்சியில் கடந்த சனிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, 15 அடி நீளமுள்ள 1,011.5 பவுண்ட் (459 கிலோ) எடையுள்ள ராட்சத முதலை அவர்களின் கண்களில் பட்டது. பல மணி நேரம் போராடி, அந்த முதலையை மாண்டி ஸ்டோக்ஸ் குடும்பத்தினர் பிடித்துவிட்டனர்.
முதலையை வேட்டையாடும் குழுவில் மாண்டி ஸ்டோக்ஸ், அவரின் கணவர் ஜான் ஸ்டோக்ஸ், உறவினர் கெவின் ஜென்கின்ஸ், அவரின் குழந்தைகள் சவன்னா ஜென்கின்ஸ், பார்க்கர் ஜென்கின்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அமெரிக்க தென் மாநிலங்களில் இவ்வளவு எடையுள்ள முதலை பிடிபட்டது இதுதான் முதல் முறையாகும்.
ராட்சத முதலையை எடை போட பயன்படுத்தப்பட்ட கருவி உடைந்துவிட்டது. பின்னர், ரோலண்ட் கூப்பர் ஸ்டேட் பூங்காவில் உள்ள எடை பார்க்கும் மையத்துக்கு முதலையை கொண்டு சென்று வன உயிர் மற்றும் நன்னீர் மீன்வளத்துறை அதிகாரிகள் எடை போட்டனர்.
வேட்டைக்குச் சென்ற முதல் முறையே சாதனை படைத்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ள மாண்டி ஸ்டோக்ஸ், மீண்டும் அனுமதி பெற்று வேட்டைக்குச் செல்ல ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.