உலகம்

ஜமால் மாயமான விவகாரத்தில் 15 பேரின் பெயரை வெளியிட்ட துருக்கி: சவுதிக்கு எதிராக வலுக்கும் ஆதாரம்

செய்திப்பிரிவு

பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டுள்ளது.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை அடுத்த வாரம் ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற அவர் அதனைத் தொடர்ந்து மாயமானார்.

இந்த நிலையில் ஜமால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இதன் பின்னணியில் சவுதி உள்ளது என்றும் துருக்கி குற்றம் சாட்டியிருந்தது.

மேலும், இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குள் ஜமால் செல்லும் வீடியோ காட்சிகளை துருக்கி  வெளியிட்ட  நிலையில், ஜமால் மாயமான சம்பவத்தில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 நபர்களின் பெயரை துருக்கி வெளியிட்டுள்ளது. இவர்களது பெயர்களை துருக்கியின் பிரபல செய்தித்தாளான ஷபா வெளியிட்டுள்ளது.

அதில்,"கடந்த அக்டோபர்  2 ஆம் தேதி சவுதி அரசைச் சேர்ந்த சில அதிகாரிகள் உட்பட 15 பேர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஜமால் சென்ற அதே நாளில் சென்றுள்ளனர். அந்த 15 பேரும் வெவ்வேறு நேரங்களில் தூதரக அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் துருக்கி விமான நிலையத்தில் சவுதி அதிகாரிகள் வந்திறங்கிய வீடியோவையும் துருக்கியின் என் டிவி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ஜமால் மாயமான விவகாரத்தில் சவுதிக்கு எதிராக தொடர்ந்து ஆதாரங்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT