உலகம்

தனது மூன்று குட்டிகளின் தந்தையைக் கொன்ற பெண் சிங்கம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் பெண் சிங்கம் ஒன்று தனது மூன்று குட்டிகளின் தந்தையான ஆண் சிங்கத்தைக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,  ”அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ளது இண்டியானாபோலிஸ் பூங்கா. இங்கு  கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே கூண்டில் சுரி என்ற பெண் சிங்கமும், நியாக் என்ற ஆண் சிங்கமும் வசிந்து வந்தன.

இந்த ஜோடிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு  3 குட்டிகள் பிறந்தன. இண்டியானாபோலீஸ் பூங்காவில் மிகவும்  புகழ்பெற்ற இந்த சிங்க ஜோடிகள் கடந்த சில மாதங்களாகவே சண்டையிட்டு வந்துள்ளன. இந்த நிலையில் பெண் சிங்கம் சுரி, ஆண் சிங்கம் நியாக்கைக் கடித்து கழுத்தை நெரித்துக் கொன்று இருக்கிறது. பூங்கா ஊழியர்கள் தடுக்க முயன்று இந்தச் சம்பவத்தைத் தடுக்க முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இண்டியானாபோலீஸ் பூங்கா நிர்வாகம் கூறும்போது, ”எங்களது பூங்கா சோகமாக இருக்கிறது. 12 வயது பெண் சிங்கம் சுரி, தனது இணையும் 10 வயது நிரம்பிய ஆண் சிங்கமான நியாக்கைத் தாக்கியதில், எற்பட்ட காயம் காரணமாக நியாக் மரணமடைந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நியாக் ஒரு அற்புதமான சிங்கம். நிச்சயம் அதன் இழப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சிங்கங்களுக்குள் மோதல் ஏற்பட்டு  அவை இறப்பது என்பது மிக அரிதாகவே நிகழும் என்று  பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT