உலகம்

வியட்நாமில் நாய்களை திருடியவருக்கு சிறை

செய்திப்பிரிவு

வியட்நாமில் நாய்களை திருடி ஓட்டல்களில் இறைச்சிக்காக விற்றவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் முதன்முறையாக ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பா ரியா வுங் தவ் மாகாணத்தில், கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி 6 நாய்களை திருடி ஒரு கோணி பையில் மறைத்து எடுத்துச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர். நாய்களை பிடிப்பதற்கு பயன்படுத்திய நவீன துப்பாக்கி (ஸ்டன் கன்) ஒன்றையும் அவரிடமிருந்து கைப்பற்றினர்.

இதுதொடர்பாக அங்குள்ள மக்கள் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த துணை தலைமை நீதிபதி லீ ஹாங் குயெட் இதுகுறித்து கூறும்போது, “நாய் திருடிய வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறை. நாய் திருட்டு சம்பவங்களைக் குறைப்பதற்கு இந்த தண்டனை உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

வியட்நாமில் செல்லப் பிராணிகளை இறைச்சிக்காகவும் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், நாய்களைத் திருடி ஓட்டல்களில் விற்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதுகுறித்து அதன் உரிமையாளர்கள் புகார் செய்தால், நாயை திருடியவருக்கு இதுவரை அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு வந்தது.

வியட்நாமில் இறைச்சிக்காக ஆண்டுதோறும் 50 லட்சம் நாய்கள் கொல்லப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் நாயைத் திருடியதாகக் கூறி, 20 பேரை கிராம மக்கள் அடித்தே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT