வங்கதேசத்தில் திங்கள்கிழமை காலையில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 200 பேரைக் காணவில்லை. 45 பேர் உயிருடனும், 2 பேர் சடலமாகவும், மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முன்ஷிகஞ்ச் காவல் துறை உயர் அதிகாரி டோபசல் ஹுசைன் கூறியதாவது:
மந்தாரிபூரின் தென்மேற்கில் உள்ள கெவ்ரகண்டியிலிருந்து மாவா படகு முனையத்தை நோக்கி பத்மா ஆற்றில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சுமார் 250 பயணிகளுடன் சென்ற அந்த படகு, முன்ஷிகஞ்ச் பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அவ்வழியாக சென்ற மற்றொரு படகில் இருந்தவர்கள் 2 பேரை சடலமாகவும் 45 பேரை உயிருடனும் மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடற்படை, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் மீட்புப் பணி சிக்கலாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நீச்சல் தெரிந்த சில பயணிகள் நீந்தி கரை சேர்ந்திருப்பார்கள்; ஆனால் பெரும்பாலானவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட அளவைப் போல 2 மடங்கு பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன என்று ஹுசைன் தெரிவித்தார். இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு படகு கவிழ்ந்ததில் 50 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச ஆற்றுப்படுகைகளில் படகு விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. பாதுகாப்பு அம்சங்களுடன் படகுகளை வடிவமைக்காததே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.