உலகம்

போர் நிறுத்தம் முறிந்தது: இஸ்ரேல் தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் பலி

செய்திப்பிரிவு

இஸ்ரேல் தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸ் படையினரால், இஸ்ரேல் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாகவும் பரஸ்பர குற்றச்சாட்டு கூறி, 72 மணி நேர போர் நிறுத்ததை இருத் தரப்பினரும் முறித்துக்கொண்டுள்ளனர்.

இதனால் காஸாவின் நகரங்களில் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கி உள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதனை பயன்படுத்தி காஸா முனையில் போர் பதற்றத்தால், விட்டுச் சென்ற தங்களது உடமைகளை மீட்டு செல்ல மக்கள் வாகனங்களோடு தங்கள் பகுதி நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் கையிருப்பும் குறைந்துக்கொண்டே போவதால், அதனையும் பூர்த்தி செய்ய தொண்டு நிறுவனங்கள் முடிவெடுத்திருந்தன.

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த தொடங்கிய அடுத்த நான்கரை மணி நேரத்தில், "ரபா நகரில் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வருகிறோம். இவை தொடரும்" என்று இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் அறிவிப்பு விடுத்தார்.

தெற்கு காசா பகுதியிலுள்ள ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் இயக்கமும், ஹமாஸ் படையினர் தங்களது ராணுவ வீரரை கடத்திச் சென்று விட்டதாக இஸ்ரேலும் ராணுவமும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐ. நா பொது செயலாளர் பான் கீ மூன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்திய போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை 8 -ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்தில் தனது வான்வழி கண்கானிப்பு மற்றும் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் ராணுவம், பின்னர் தரைவழியே 86,000 ராணுவ வீரர்களுடன் தனது தாக்குதல்களை தொடர்ந்தது.

இதுவரை இந்த தாக்குதல்களில் 1,450-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மேலும் கூடுதலாக, 16,000 ராணுவ வீரர்களை களத்திற்கு இஸ்ரேல் இணைத்துக்கொண்டுள்ளது. உலக நாடுகளின் வலியுறுத்தல்களை அடுத்து ஒப்புதல் அளித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் இதுவரையில் 4 முறை மீறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT