உலகம்

ஏமனில் பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு: ஐ.நா. எச்சரிக்கை

செய்திப்பிரிவு

உள்நாட்டுப் போர்  நடந்து வரும் ஏமனில் பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரத் துறை தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,  ”ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக மக்கள் தொகையில் பாதி சதவீதம் அடிப்படைத் தேவைகளுக்காக மனிதாபிமான உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.  இதன் காரணமாக ஏமனில் பெரிய அளவிலான பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த நவம்பர் மதம் ஏமனில் பஞ்சம் காரணமாக பலர் பலியாகியுள்ளனர் “ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டுப் போர் காரணமாகவும், விலைவாசி ஏற்றம் காரணமாகவும் 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஏமனில்  உணவில்லாமல் தவித்து வருவதாக 'சேவ் தி சில்ட்ரன்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.

SCROLL FOR NEXT