உலகம்

ஜமால் கொலையில் சவுதி விசாரணை திருப்திகரமாக இல்லை: ட்ரம்ப்

செய்திப்பிரிவு

ஜமால் கொலை குறித்து சவுதியிடமிருந்து வரும் செய்திகள் திருப்திகரமாக இல்லை என்று  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ”சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது குறித்து சவுதியிடமிருந்து வரும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை. எனினும் அவர்களிடமிருந்து  விசாரணை குறித்து வரும் தகவல்களை இழக்க விரும்பவில்லை.  நாம் இந்த வழக்கின் ஆழம்வரை செல்ல வேண்டும்” என்றார்.

முன்னதாக, ஜமால் கொல்லப்பட்டதை மறுத்து வந்த சவுதி, பின் அதனை ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து அந்நாடு சவுதி தரப்பில், ”ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு. அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான் உத்தரவிட்டார் என்பதை நாங்கள் மறுக்கிறோம்.

எங்களுடைய மூத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஜமாலின் கொலை குறித்து தெரியாது.  ஜமாலின் உடல் எங்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஜமாலின் கொலை தொடர்பாக நாங்கள் அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய தீர்மானமாக இருக்கிறோம்” என்று தெரிவித்தது.

சவுதியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கடந்த அக்டோபர் 2-ம் தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக அலுவகத்துக்குச் சென்றவர் மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT