உலகம்

அணிலை சித்ரவதை செய்தவர் பற்றிய தகவலுக்கு ரூ. 10 லட்சம் பரிசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்க தேசிய பூங்காவில் ஒருவர் அணிலை எட்டி உதைத்து தள்ளுவது போன்ற கொடூர காட்சி இணைய தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அந்த இரக்கமற்ற நபரை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 17 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சத்து 40 ஆயிரம்) பரிசு வழங்கப்படும் என்று விலங்குகள் நல அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கிராண்ட் பள்ளத் தாக்கு தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள மலை முகட்டில் மேல் சட்டையின்றி காணப்படும் ஒரு நபர், உணவு ஆசை காட்டி அணில் ஒன்றை அருகில் வரவழைப்பதும் பின்னர் அந்த அணிலை பள்ளத்தில் எட்டி உதைத்து தள்ளுவது போன்ற இரக்கமற்ற காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகின. அந்த கொடூர நபரின் செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அந்த நபரை கைது செய்ய உதவிடும் வகையில் அவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ‘பீப்பிள் பார் தி எத்திகல் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ்’ என்ற அமைப்பின் பிரிட்டன் கிளை 17 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தேசிய பூங்கா சரகர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பூங்காவின் செய்தித் தொடர்பாளர் கிர்பி லின் ஷெட்லோஸ்கி கூறும்போது, “எந்த இடத்தில் எப்போது இந்த சம்பவம் நடந்தது என்ற விவரம் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. அந்த நபர் பிடிபட்டால் அவர் மீது வனவிலங்குகள் சித்ரவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT