ஆப்கானிஸ்தானில் சாலையில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஆறு குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் ”ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் மாகணத்தில் உள்ள அசின் மாவட்டத்தில் உள்ள மாமண்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் பலியாகினர். பலியானவர்களில் 6 பேர் குழந்தைகள்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானைத் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டு பயங்கர கட்டுப்பாடுகள் விதித்தனர். அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.
எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக ராணுவத்தினர், போலீஸாரை குறிவைத்து தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.