உலகம்

காஸாவில் அமைதி தொடர வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காஸாவில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், அங்கு தற்போது நிலவும் அமைதியை இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பினரும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

காஸாவில் 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் அச்சமின்றி தங்களது வீடுகள் இருந்த பகுதிக்கு சென்று அங்கு எஞ்சியுள்ள தங்களது உடமைகளை எடுத்துக்கொள்ள விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது காஸாவில் நிலவும் இந்த அமைதி தொடர வேண்டும். இதற்காக இஸ்ரேல் ராணுவமும் ஹாமாஸ் அமைப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வலியுறுத்தினார்.

மேலும், எகிப்து அழைப்பு விடுத்திருக்கும் அமைதி பேச்சில் அமெரிக்காவும் பங்குபெற வேண்டும், அதன் மூலம் அமலில் உள்ள 3 நாட்கள் போரில்லா சூழல் காஸாவில் என்றும் தொடர, தங்களது நாடும் உதவ நினைப்பதாக அதிபர் ஒபாமா கூறியதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறும்போது, "கெய்ரோவில் நடைபேறும் பேச்சு வார்த்தையில் அமெரிக்காவும் இடம்பெற நாங்கள் விரும்புகிறோம். இந்த பிரச்சினையில் எங்களால் என்ன தீர்வு காண முடியும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT