உலகம்

வவுனியாவில் இலங்கை தாக்குதலில் 2 விடுதலைப்புலிகள் சாவு

செய்திப்பிரிவு

இலங்கை பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த கோபி என்கிற கஜீபன் பொன்னையா செல்வநாயகம், மற்றும் தேவியன் என்கிற சுந்தரலிங்கம் கஜீபன் உட்பட, 3 பேர் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி வனப்பகுதியில் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2009ல் நடந்த இறுதிகட்டப் போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டபிறகு இப்போதுதான் வடக்கில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பெரிய தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 3வது நபர் அப்பன் விடுதலைப் புலியா என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. ராணுவம் சுற்றி வளைத்ததும் தப்ப முயற்சித்தபோது மூவரும் கொல்லப்பட்டனர் என்று பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்தார்.

கோபியும் அவரது கூட்டாளியும் வடக்கிலும் கிழக் கிலும் ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டதாகவும் இரு பெரும் சமூகங்களுக்கு இடையே விரோதத்தை தூண்டிவிட்ட தாகவும் அதிகாரிகள் தெரிவித் தனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பித்து ஒன்றிணைக்கும் முயற்சியில் கோபி என்பவர் ஈடுபட்டிருந்ததாகவும், இவர் தன்னைத் தேடி வந்த போலீஸ் அதிகாரி ஒருவரை கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் துட்டுவிட்டு தப்பியோடியதாகவும் அரசு தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

தேடப்பட்டு வந்த கோபிக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தர்மபுரம் பகுதியில் தனது வீட்டிலிருந்த ஜெயக்குமாரி என்ற பெண்ணும் அவருடைய 14 வயது மகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விடுதலைப்புலி இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சிப்பவர்களுக்கு உதவியதாக, கடந்த ஒரு மாதத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் அஜித் ரோகண வியாழக்கிழமை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT