உலகம்

தேர்தலை சீர்குலைக்க காத்திருக்கும் சீனா, ரஷ்யா, ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அமெரிக்க இடைத்தேர்தலைச் சீர்குலைக்க சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் காத்திருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத் துறை தரப்பில், ”அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி சீர்குலைக்க சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சமூக வலைதளங்களின் மூலம் வேட்பாளர்களைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புவார்கள். வெளிநாட்டினர் நமது தேர்தல்களில் தலையிடுவது நமது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ரஷ்யாவைச் சேர்ந்த எலைனா அலிக்சிவ்னா என்பவர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 2018-ல் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் நபர் இவர்தான் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2016 நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.

இதில் அப்போது தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் ஹிலாரியின் சர்ச்சைக்குரிய 6.5 லட்சம் இ-மெயில்கள் இணையத்தில் வெளியாகின. மேலும் ஹிலாரியின் உடல்நலம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரப்பப்பட்டன.

 இவற்றின் பின்னணியில் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. அதிபர் தேர்தலில் ஹிலாரியைத் தோற்கடிக்க ரஷ்ய அமைப்புகள் சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளைப் பரப்பியதாக ஜனநாயகக் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT