பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். நடத்தும் தாக்குதல்கள் இனப்படுகொலைகளை விடவும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுக்களில் பலர் பேராசியர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்களாவார்கள். இவர்கள் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
அதில் அமெரிக்கா, சவுதி அரேபியா, யு.ஏ.இ, மற்றும் குவைத் ஆகிய நாடுகள் சிரியாவிலும் இராக்கிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி மகிழ்கின்றனர் என்று கண்டித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.-இன் செயல்பாடுகளை “இனப்படுகொலைகளை விட மோசமானது” என்று வர்ணித்த சமூகத் தொண்டர் ஷப்னம் ஹஷ்மி, “இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிறிஸ்துவர்கள், ஷியா முஸ்லிம்கள், குர்திஷ் மக்கள், யாஜிடிக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்தும் தாக்குதல்கள் காட்டுமிராண்டித் தனமானவை.
இவர்களின் வன்முறையினால் நிலம், வீடு, கால்நடைகள், சொந்தபந்தங்களை இழந்து வாடும் இராக்கியர்களுக்கு எங்களது இதயங்கனிந்த ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றொரு சமூக ஆர்வலர் நவைத் ஹமீத் என்பவர் கூறுகையில், “இஸ்லாமின் பெயரால் அவர்கள் சிறுபான்மையினர் மீது மட்டுமல்ல, தங்கள் கொள்கைகளை எதிர்க்கும் ஒவ்வொருவர் மீதும் அராஜகங்களை பிரயோகப்படுத்துகின்றனர். இஸ்லாமிய போதனைகளை மறந்து தவறான விளக்கங்களின் அடிப்படையில் தொடுக்கப்படும் வன்முறைகள் ஏற்கத்தக்கதல்ல.
இஸ்லாமிய போதனைகளின் படி வயதானோர், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் மதிக்கப்படவேண்டும், ஆனால் இவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமியத்தின் பெயரால் கொலை செய்து வருகிறது” என்றார் அவர்.