உலகம்

ஜிம்பாப்வே பொதுத் தேர்தல்: ஆளும் கட்சி முன்னிலை

செய்திப்பிரிவு

ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப்.  ( ZANU–PF ) கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறையில்  எந்த வன்முறையும் இல்லாமல் பொதுத் தேர்தல் செவ்வாய்க்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது.

இந்தத் தேர்தலில் தற்போது ஜிம்பாப்வே அதிபராக இருக்கும் எம்மர்சனுக்கும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான 40 வயதான நெசன் சாமிசாவுக்கும் கடும் போட்டி  நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஆளும் கட்சியான ஜனு பி.எப். ( ZANU–PF ) பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் கட்சி 109 இடங்களை கைப்பற்றியுள்ளதாகவும், இன்னும் 58 இடங்களில் முடிவு அறிவிக்கப்படவில்லை என்றும் ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

1980-ல் சுதந்திரம் பெற்றது ஜிம்பாப்வே. அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது. 

சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே  நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் ஜனு பி.எப். கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர்.

தொடர்ந்து முகாபேவுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் அதிகரிக்க, அதிபர் பதவியை முகாபே கடந்த வருட இறுதியில் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து எம்மர்சன் அதிபராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT