உலகம்

விளையாட்டாகப் பயன்படுத்திய துப்பாக்கியால் பயிற்சியாளர் பலி

செய்திப்பிரிவு

'விளையாட்டு வினையானது' என்பது நம்மில் பலருக்கு வெறும் பழமொழிதான். ஆனால் அமெரிக்காவில் இது உண்மையாகி இருக்கிறது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ளது லாஸ்ட் ஸ்டாப் எனும் சுற்றுலாக் கூடம். இது சற்று வித்தியாசமான சுற்றுலாக் கூடம். இங்கு வயது வித்தியாசமில்லாமல் யார் வேண்டுமானாலும் எந்த ரக துப்பாக்கியை வேண்டுமானாலும் இயக்கலாம். இது அத்தனையும் உண்மைத் துப்பாக்கிகள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்!

கடந்த 14 ஆண்டுகளாக இந்த வித்தியாசச் சுற்றுலாக் கூடம் செயல்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் துப்பாக்கியைத் தவறாகக் கையாண்டதால் விபத்து ஏற்பட்டது என்று ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் இந்த வாரம் திங்கள்கிழமை அந்த சுற்றுலாக் கூடத்துக்கு ஒரு கரும்புள்ளியை வைத்திருக்கிறது.

இந்த இடத்துக்குத் தன் பெற்றோர்களுடன் சுற்றுலா வந்த 9 வயதுச் சிறுமி 'உசி' ரக துப்பாக்கியைக் கவனக் குறைவாகக் கையாண்டதால், அதிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள் 'லாஸ்ட் ஸ்டாப்' நிறுவனத்தின் பணியாளர் சார்லஸ் வாக்கா உயிரைப் பறித்தது. அவர் இங்கு துப்பாக்கிச் சுடக் கற்றுத்தரும் பயிற்சியாளராக இருந்தவர் ஆவார். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

1950-களில் இஸ்ரேல் ராணுவத்தினருக்காகத் தயாரி க்கப்பட்டது 'உசி' ரகத் துப்பாக்கி. கனமற்ற வடிவமைப்புக்கும் எளிய பயன்பாட்டுக்கும் பெயர் போன இந்தத் துப்பாக்கி உள்ளிட்ட பல ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்த அரிசோனா மாகாணத்தில் வயது வரம்புகள் எதுவும் இல்லை. 18 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் கைத்துப்பாக்கி வைத்திருக்க அமெரிக்கக் காவல்துறை சட்டம் விதித்திருக்கிறது என்றாலும், 'லாஸ்ட் ஸ்டாப்' போன்ற ஷூட்டிங் ரேஞ்சுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு 8 வயது குழந்தைகள் கூட ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பலவகையான துப்பாக்கி ரகங்களைப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள்.

SCROLL FOR NEXT