அமெரிக்கா 130 ராணுவ வீரர்களை இராக்குக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவின் பேரில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவர்கள் இராக்கின் குர்திஷ் பகுதி தலைநகர் இர்பிலுக்கு சென்றுள்ளனர். இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் வான் வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இராக்கின் சின்ஜார் மலைப் பகுதியில் சிக்கியுள்ள யாஸிதி சிறுபான்மையினருக்கு உதவுவதற்காக இந்த ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயுதம் ஏந்தி போரில் ஈடுபடமாட்டார்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகலின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஒபாமா 130 ராணுவ வீரர்களை இராக் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க கடற்படை, சிறப்பு நடவடிக்கை படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இராக் அரசு கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும். சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்ய தீவிரவாதிகளை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையை இராக்குக்கு உதவ வேண்டுமென்று சர்வதேச சமூகத்துக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். துருக்கி, கனடா பிரதமர்களை தொடர்பு கொண்டு ஒபாமா பேசியுள்ளார். அதே நேரத்தில் இராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் ஈடுபட்டுள்ளார்.
இராக்கின் புதிய அதிபராக அல்- அபாதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஆட்சி அமைக்க ஒருமாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஜோ பிடன், இராக் பிரதிநிதிகள் அவையின் தலைவர் ஒசாமா அல்-நுஜாய்பியுடன் பேசியுள்ளார்.
இராக்குக்கு ஆஸ்திரேலிய ராணுவம்
பிரிட்டன் சென்றுள்ள ஆஸ்திரேலிய அதிபர் டோனி அபோட், அந்நாட்டு அதிகாரிகளுடன் இராக் பிரச்சினை குறித்து விவாதித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபத்தில் உள்ள மக்களை காப்பாற்ற ஆஸ்திரேலியா கண்டிப்பாக முயற்சி மேற்கொள்ளும்.
எனவே இராக்குக்கு ஆஸ்திரேலிய ராணுவம் செல்லாது என்று கூற முடியாது. உரிய ஆலோசனைக்கு பின் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக 2003-ம் ஆண்டில் இராக்கில் அமெரிக்காவும், பிரிட்டனும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டபோது ஆஸ்திரேலியா 2 ஆயிரம் வீரர்களை அனுப்பியது நினைவுகூரத்தக்கது.
ஈராக் நடவடிக்கை - கெர்ரி விளக்கம்
இராக்கில் மலைப்பகுதியில் சிக்கியுள்ள யாசிதி சிறுபான்மையினர், கிறிஸ்தவர்களை மீட்கவே அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.
இராக்கின் சின்ஜார் மலைப்பகுதியில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. இந்நிலையில் சாலமோன் தீவுகள் தலைநகர் ஹொனியாராவில் இது தொடர்பாக ஜான் கெர்ரி செய்தியாளர்களிடம் கூறியது:
இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றார்.சன்னி பிரிவு முஸ்லிம்களான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஷியா பிரிவினர் பலரை ஏற்கெனவே கொன்று குவித்துவிட்டனர். இராக்கில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் பிற இனத்தவர்களை முஸ்லிம் மதத்துக்கு மாற வேண்டும் இல்லையென்றால் வாளுக்கு இரையாக வேண்டும் என்றும் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.