உலகம்

மோடியை வரவேற்க 300க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம்

செய்திப்பிரிவு

வரும் செப்டம்பர் மாதம் முதல் முறையாக அமெரிக்காவுக்கு வருகை தரவிருக்கிற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அந்நாட்டிலுள்ள 300க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த வரவேற்பு வைபவத்தில் அந்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 28ம் தேதி நியூயார்க்கில் உள்ள‌ வரலாற்றுச் சிறப்புமிக்க மேடிசன் சதுக்கத் தோட்டத்தில் `இந்திய அமெரிக்க சமுதாய அமைப்பு' என்ற பெயரின் கீழ் நடத்தப்படுகிற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்த‌ இந்தியர்களின் நலன் குறித்து மாபெரும் கொள்கை உரை ஒன்றை மோடி நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி நடைபெறும் மேடிசன் சதுக்கத்தில் சுமார் 18,000 முதல் 20,000பேர் வரை ஒரே சமயத்தில் பங்கேற்க முடியும். அதன்படி பார்த்தால் இந்த அளவு மக்கள் கூட்டத்தினூடே உரையாற்றுகிற இந்தியப் பிரதமர் மோடியாகத்தான் இருப்பார். மோடிக்கு அளிக்கப்படும் வரவேற்பு இதுவரை அமெரிக்க மண்ணில் சமீபமாக‌ வேறு எந்த வெளிநாட்டுத் தலைவருக்கும் கிடைத்திருக்காத அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை மேடிசன் சதுக்கத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் ஒரே சமயத்தில் அந்த நிகழ்ச்சியைக் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தயாரிப்புகளை மேற்பார்வையிடுவதற்காக பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் இந்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

SCROLL FOR NEXT