உலகம்

‘செல்ஃபி’ எடுக்க ஆசைப்பட்டு மரணத்தைத் தழுவிய தம்பதியர்

செய்திப்பிரிவு

போர்ச்சுகலில் மலை உச்சியிலிருந்து ‘செல்ஃபி’எடுத்துக் கொள்ள முயற்சித்த போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

போர்ச்சுகலில் உள்ள கபோ டி ரோகா மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர், தங்களை தாங்களே செல்போனில் புகைப்படம் (செல்பி) எடுத்துக்கொள்ள முயற்சித்தனர்.

அப்போது இருவரும் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் கடந்த திங்கள்கிழமை மீட்கப்பட்டன.

இருவரும் தவறி விழுந்தபோது, அவர்களின் இரு குழந்தைகளும் உடனிருந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

மலையின் உச்சியில் பாதுகாப்பு தடுப்புகளை சுற்றுலாத்துறை அதிகாரிகள் அமைத்துள்ளனர். ஆனால், அந்த தடுப்பையும் தாண்டிச் சென்று புகைப்படம் எடுக்க முயன்றபோதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மெக்ஸிகோவில் கடந்த வாரம், தனது தலையில் துப்பாக்கியை வைத்த நிலையில் ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக டிரிக்கரை அழுத்தியதில் குண்டுபாய்ந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT