உலகம்

26 முறை திருமணம் செய்த பெண்ணுக்கு சட்ட சிக்கல்

செய்திப்பிரிவு

சீனாவில் 26 முறை திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அதிக முறை திருமணம் செய்து கொண்டார் என்பதால் சிக்கல் ஏற்படவில்லை. அந்நாட்டு குடும்பக் கட்டுப்பாடு சட்டமே அப்பெண்ணுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

ஷுயாங் என்ற அந்த 40 வயது பெண் ஜியாங்ஷு மாகாணத்தை சேர்ந்தவர். இவர் 25-வதாக திருமணம் செய்து கொண்ட கணவர் மூலம் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டு, மற்றொருவரை மணந்தார்.

பின்னர் சீன நாட்டு சட்டப்படி தனது வயிற்றில் உள்ள குழந்தையை பதிவு செய்து கொள்வதற்காக குடும்ப கட்டுப்பாட்டு அலுவலகத்துக்குச் சென்றார். ஜியாங்ஷு தன்னுடன் அழைத்துச் சென்ற கணவரின் பெயரில் அங்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் பதிவாகியிருந்தன. ஏனெனில் அவருக்கு முந்தைய மனைவி மூலம் இரு குழந்தைகள் உள்ளன.

இதனால் சட்டப்படி அவரது பெயரை தந்தை என குறிப்பிட்டு 3-வது ஒரு குழந்தையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஜியாங்ஷுவின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு சட்டப்படி தந்தை இல்லை என்ற நிலை உருவாகியது. இதையடுத்து மீண்டும் தனது முந்தைய கணவரை தேடும் பணியில் ஜியாங்ஷு ஈடுபட்டுள்ளார். ஏனெனில் அவரது பெயரில் இதுவரை ஒரு குழந்தை கூட பதிவாகவில்லை.

ஜியாங்ஷு இதுவரை 15 பேரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் 9 கணவர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திருணம் செய்து கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT