ஐஎஸ் இயக்கத்துக்கு உதவினேன் என்று அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ் அமைப்புக்கு உதவியதாக கைகா காங் என்ற அமெரிக்க ராணுவ வீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு குறித்து எஃப்பிஐ அதிகாரி சொரன்சன் கூறும்போது, ''கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், கைகா காங் ஐஎஸ் அமைப்புக்கு உதவி இருக்கிறார். அமெரிக்க ராணுவத்தின் ஆயுதங்கள் தொடர்பான ரகசியங்கள் அமெரிக்காவுக்குப் பணிபுரியும் அதிகாரிகளைப் பற்றிய ரகசியத்தையும் ஐஎஸ் அமைப்பிடம் அளித்திருக்கிறார்.இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்" என்றார்.
ஐஎஸ் கொடியை காங் பிடித்தபடி இருப்பது போன்ற புகைப்படத்தையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிபதியின் முன் கைகா காங் (35) கூறும்போது, "நான் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் பல ஆவணங்களை அளித்துள்ளேன். நான் ஐஎஸ் இயக்கத்தில் இணைந்திருந்தால் நிச்சயமாக தற்கொலைப் படை தீவிரவாதியாகி ஹோனோலுவில் உள்ள ராணுவ அலுவலகத்தைத் தாக்கி இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, இராக் போன்ற நாடுகளில் ஐஸ்ஸுக்கு எதிராக அமெரிக்கா கடுமையாகப் போரிட்டு வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் அமைப்புக்கு அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உதவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.