உலகம்

தீவிரவாதிகள் பிடியில் அமெரிக்கப் பெண்

செய்திப்பிரிவு

சிரியாவிலுள்ள இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினரிடம், அமெரிக்க இளம்பெண் ஒருவர் பணயக் கைதியாக பிடிபட்டுள்ளார். 26 வயதான அந்தப் பெண் சிரியாவில் மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

இராக்கில் மவுன்ட் சிஞ்சார் பகுதியில் தீவிரவாதிகள் முன்னேறாமல் தடுக்கும் வகையில் வான்வெளித் தாக்குதல் நடத்தப்படுகிறது. அதேபோன்று, குர்திஸ் பகுதியிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்குப் பழிவாங்கும் விதத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர் அமெரிக்கப் பணயக் கைதிகளைக் கொன்று விடுவதாக மிரட்டி வருகின்றனர்.

இதனிடையே, சிரியாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டிருந்த 26 வயது இளம்பெண்ணை இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். அவரின் பாதுகாப்பு கருதி அப்பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அப்பெண்ணின் குடும்பத்தினரும், அமெரிக்க அதிகாரிகளும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினரால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினரிடமும், வேறு தீவிரவாத இயக்கத்தினரிடமும் பல அமெரிக்கர்கள் பிணையக் கைதிகளாக பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT