தேர்தலில் தங்கள் வாக்கை பதிவிட்டு தீவிரவாதிகளின் திட்டத்தை பாகிஸ்தான் மக்கள் முறியடிப்பார்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் வாதியும், தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏராளமான இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
பலூசிஸ்தான் மாநில தலைநகர் குவெட்டா நகரில் வாக்குச் சாவடி அருகே இன்று நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், " குவெட்டாவில் நடந்த தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக வருந்துகிறேன். பாகிஸ்தானின் எதிரிகள் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயல்கிறார்கள். பாகிஸ்தானியர்கள் வலியுடன் வெளியே வந்து தங்கள் வாக்கை பதிவிட்டு தீவிரவாதிகளின் திட்டத்தை தோற்கடிப்பார்கள். என்று பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும்.
நாடு முழுவதும் சுமார் 10. 5 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மாகாண சட்டப்பேரவை என 2 வாக்குகளைப் பதிவு செயகிறார்கள்.
இன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடந்து, நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.