உலகம்

இந்தியாவுக்கான வரியை 50% ஆக உயர்த்தினார் ட்ரம்ப் 

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50% ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார்.

இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 7- ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளைவிதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நியாயமற்ற நடவடிக்கை: ‘அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது. தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து உரம், யுரேனியத்தை அமெரிக்கா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. இதுகுறித்து ட்ரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘எனக்கு அதுபற்றி தெரியாது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு சரிபார்க்கிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT