உலகம்

தாய்லாந்து மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது.

இந்த காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் நேற்று காலையில் பரபரப்பாகப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் கொலையாளி உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக பாங்காக் போலீஸார் கூறியதாவது: துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் போக்கு இந்த சம்பவத்துக்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

SCROLL FOR NEXT