ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அந்நாட்டுக்கு 200 மில்லியன் டாலர் கடன் இந்தியா சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் பால் ககமே விமானம் நிலையம் சென்று வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா - ருவாண்டா இடையே நிலவும் உறவு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். வர்த்தகம் மற்றும் வேளாண் துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியதுவம் குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய அங்கம் பெற்றது.
மேலும் இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் வேளாண் சார்ந்த பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். வேளாண் மற்றும் தொழில் துறையில் ருவாண்டாவுக்கு இந்தியா சார்பில் 200 மில்லியன் டாலர் கடன் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதன் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, "ருவாண்டாவின் பொருளாதாரத்தில் இந்தியா உதவுவதை நான் கவுரமாகப் பார்க்கிறேன். தொடர்ந்து ருவாண்டாவின் வளர்ச்ச்சிக்கு இந்தியா உதவும். ருவாண்டாவில் இந்தியா தனது பணியை விரைவில் தொடங்கவுள்ளது" என்று தெரிவித்தார்.
ருவாண்டாவிலிருந்து, உகண்டாவிற்கு இன்று பயணம் செய்கிறார். அங்கு நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கிறார் மோடி. இதனைத் தொடர்ந்து மோடி 25-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ருவாண்டாவுக்கு பயணம் செய்த முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.