ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள ஈளம் மாகாணத்தில் திங்கள்கிழமை காலை 7.02 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இராக் எல்லையை ஒட்டியுள்ள அப்தானன் நகருக்கு தென்கிழக்கில் 36 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டரில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் கூறும்போது, "இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் காயமடைந்த சிலர் மீட்கப்பட்டனர். உடைமைகளுக்கு லேசாக சேதம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவே லேசான நில அதிர்வுகள் இருந்ததால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கு வெளியே இரவுப்பொழுதை கழித்ததாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (7.8) 40 பேரும், கடந்த 2003-ம் ஆண்டு பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.