இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப், வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இடையே சுமுக உறவு ஏற்பட அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திடீரென இருநாட்டு வெளியுறவுச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது துரதிருஷ்டவசமானது. இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஊடகம் கருத்து
இந்த விவகாரம் குறித்து இஸ்லாமா பாதில் இருந்து வெளியாகும் “டான்” நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்றதால் இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம் மலரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியுறவுச் செயலர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பது இருநாட்டு உறவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.