சிரியாவில் சந்தை ஒன்றில் பொருட்களை வாங்கும் பெண்கள் | கோப்புப் படம் 
உலகம்

பெண்கள் இறுக்கமான ஆடை அணிய சிரியாவில் கட்டுப்பாடு

சாந்தகுமார்

டமாஸ்கஸ்: பொது இடங்களில் பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கடற்கரைகள் மற்றும் நீச்சல்குளங்களுக்குச் செல்லும்போது புர்கா அல்லது முழு உடலையும் மறைக்கும் நீச்சலுடைகளை அணிய வேண்டும் என்று சிரியாவின் புதிய இஸ்லாமிய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிரியாவில் ஆட்சியில் இருந்த பஷார் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதை அடுத்து அஹமது அல் ஷரா தலைமையிலான இடைக்கால இஸ்லாமிய அரசு கடந்த டிசம்பரில் ஆட்சிப் பொறுப்பேற்றது.

இடைக்கால அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன நிலையில், தற்போது ஆடைக்கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அதிபர் அஹமது அல் ஷரா ஒப்புதலுடன் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், 'கடற்கரைகளுக்குச் செல்லும் பெண்கள் புர்கா அல்லது உடலை மறைக்கும் பிற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நீச்சல் குளங்கள் தவிர்த்த பொது இடங்களில், பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்கும்படியான ஆடைகளை அணிய வேண்டும். ட்ரான்ஸ்பரண்ட் ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஆண்கள் மேலாடையின்றி இருக்க அனுமதி இல்லை.

அதேநேரத்தில், ஆடம்பரமான தனியார் கடற்கரை கிளப்புகள் மற்றும் இடங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகள் பதிவாகி உள்ளன. ஷாசா என்ற சிரிய பெண் ஒருவர், “அரசின் இந்த உத்தரவு சிரியர்களின் தனிப்பட்ட சுதந்திரங்கள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. சிரியா ஒரு மிதவாத மற்றும் திறந்த நாடு. அது கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவருக்கும் இடமளிக்க வேண்டும். புதிய உத்தரவு குறித்து அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், யஹ்யா கபிஷோ என்ற நபர் புதிய விதிகளுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். இது சிரிய சமூகத்தின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டிய கடமையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT