சிரியாவின் தென் பகுதியில் நடந்த தொடர் தற்கொலைப்படைத் தாக்குதல் மற்றும் மார்க்கெட் பகுதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 38 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "சிரியாவின் தென்பகுதியிலுள்ள ஸ்விடா மாகாணத்தில் புதன்கிழமை தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடம்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தனர். மற்றும் மார்க்கெட் பகுதியிலும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவங்களில் 38 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சிரிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
தீவிரமாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில், ஸ்விடா மாகாணம்தான் இதுவரை வன்முறை சம்பவங்களால் பெருமளவு பாதிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தீவிரவாதிகள் ஸ்விடா மாகாணத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவில் அமெரிக்கா மற்றும் சிரிய அரசின் தொடர் நடவடிக்கைகளால் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளை சிரிய அரசு கைப்பற்றியது.
சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.