தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்பதற்கு உதவிய முக்குளிப்பு நிபுணரைப் பற்றி பாலியல் ரீதியாக விமர்சித்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர் இலோன் மஸ்க் மன்னிப்பு கோரினார்.
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட கால்பந்து அணியைச் சார்ந்த சிறுவர்கள் கடந்த ஜூன் 23-ம் தேதி இந்தக் குகைக்கு சென்றனர்.
இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றனர். அப்போது அங்கு பெய்த கடுமையான மழை காரணமாக குகையில் சிக்கிக் கொண்டனர். பின்னர் 18 நாட்கள் போராட்டங்களுக்கு பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியில் முக்கியப் பங்கு வகித்தவர் பிரிட்டிஷ் முக்குளிப்பு நிபுணர் வெர்ன் அன்ஸ்வர்த்.
இவர் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய தொழில்நுட்ப நிறுவனத் தலைவர் இலோன் மஸ்க் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்பதற்கு சிறிய நீர் மூழ்கிகள் வழங்கியதை விளம்பரம் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த இலோன் மக்ஸ் அவரை பீடோ பில் ( சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்பவர்) என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த விவகாரம் ஊடகங்களில் விமர்சிக்கப்பட தற்போது தனது கருத்துக்கு இலோன் மஸ்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில் "அவர் எனக்கு எதிராகப் பேசியுள்ளார் என்பதற்காக அவருக்கு எதிராக நான் பேசுவது நியாயம் ஆகாது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர் என்ற முறையில் இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தவறு என்னுடையதுதான். என்னுடையது மட்டும்தான்” என்று கூறியுள்ளார்.
இதற்கு வெர்ன் அன்ஸ்வர்த் செய்தி நிறுவனம் ஒன்றில் பதிலளித்தபோது" இது இன்னும் முடியவில்லை. நான் அவர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். அவர் என்னை பீடோ பில் என்று கூறினார் என்று நினைக்கிறேன். அவர் எந்த மாதிரியான மனிதர் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.