உலகம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கட்சி முன்னிலை: முறைகேடு நடந்ததாக முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

பிடிஐ

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி 100க்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலில் முறைகேடு நடந்ததாக முஸ்லிம் லீக் கட்சி புகார் கூறியுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலூசிஸ் தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 இடங்களில் 272 தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மீதம் உள்ள 70 இடங்கள் நியமன அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் 4 மாகாணங்களுக்குட்பட்ட 577 இடங்களுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 85 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்டது.

இம்ரான் கான் கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிற்து. தற்போதைய நிலவரப்படி  113  இடங்களில் தெஹ்ரிக்-இ-இன்சாப்  முன்னிலை பெற்றுள்ளது.

நவாஷ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி,  தற்போதைய நிலவரப்படி 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் ஆதரவாளர்கள்  நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலில் முறைகேடு

இந்த நிலையில் நவாஷ் ஷெரீப் தம்பியும் பாகிஸ்தான் முஸ்லிம் லிக் கட்சியின் தற்போதைய தலைவருமான ஷெபஸ் ஷெரீப் நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த்த் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஷெபஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தத் தேர்தல் முடிவுகள் தேசத்தின் நலனை சீர்குலைக்கும். நாங்கள் சட்டரீதியாக இதனை அணுக உள்ளோம்”  என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் மறுப்பு

ஆனால் ஷெபஸ் ஷெரீப்பின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தரப்பில், ”நாங்கள் எங்கள் பணியை சரியாக செய்தோம், முறைகேடு ஏதும் நடைபெறவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT