உலகம்

சிகிச்சை முடிந்து திரும்பும் தாய்லாந்து சிறுவர்கள்

பிடிஐ

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் இன்று மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "குகையிலிருந்து மீட்கப்பட்ட கால்பந்து அணியின் சிறுவர்கள் குழு இன்று (புதன்கிழமை) சிகிச்சை முடிந்து  வெளியேற இருக்கிறார்கள். சிறுவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு முன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்தச் சந்திப்புக்கு பிறகு ஊடகங்கள் அவர்கள் அன்றாட வாழ்வில் தலையிடு இருக்காது என்று நினைக்கிறோம். சிறுவர்களுடனான பத்திரிகையாளர் சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெறும்” என்றார்.

குறைந்தது ஆறு மாதத்துக்காவது பத்திரிக்கையாளர்கள் சிறுவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று தாய்லாந்து மருத்துவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

முன்னதாக, தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கால்பந்து அணி கடந்த ஜூன்  23-ம் தேதி இந்தக் குகைக்கு சென்றனர். இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றனர்.

இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்பு குழுவினர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு 18 நாட்கள் போராட்டகளுக்கு பிறகு கால்பந்து சிறுவர்கள் அணியையும் அவர்களது பயிற்சியாளரையும் மீட்டனர்.

SCROLL FOR NEXT