உலகம்

காதலரை மணப்பதற்காக அரசர் குடும்பத்தைத் துறந்த ஜப்பான் இளவரசி

செய்திப்பிரிவு

காதலித்த நபரை மணந்ததற்காக இளவரசி பட்டத்தைத் துறந்திருக்கிறார் ஜப்பானின் இளவரசி அயாகோ.

மறைந்த முன்னாள் ஜப்பான் இளவரசர் தகாமாடோவின் மூன்றவது மகளான அயாகோ கடற்படையைச் சேர்ந்த ஊழியர் கி மோரியாவைக் காதலித்து மணக்க இருப்பதால் அரச குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். 

ஜப்பான் சட்டத்தைப் பொறுத்தவரை அங்கு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சாமானியர்களை மணந்தால் அவர்கள் அரசர் குடும்பத்திலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் அரசக் குடும்பத்திலுள்ள உள்ள ஆண்கள் அரசக் குடும்பம் அல்லாது சாமானியப் பெண்களை மணந்தால் அவர்கள் அரசக் குடும்பத்திலிருந்து நீக்கப்பட மாட்டார்கள். இதன்படி தற்போது அயாகோ வெளியேறி இருக்கிறார்.

தனது எதிர்காலக் கணவர் மோரியாவுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அயாகோ கூறும்போது,  "விருந்து நிகழ்ச்சி ஒன்றில்  மோரியா என்னைக் காதலிப்பதாகக் கூறினார்.  நானும் அதனை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

இதற்கு முன்னரும்  அயாகோவின் சகோதரிகள் இருவர் சாமானியர்களை மணந்ததால் அரசக் குடும்பத்திலிருந்து தங்களது பதவியை இழந்தனர்.

இதனால் அரசக் குடும்பத்தில் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறதே? என்று  பத்திரிகையாளர்கள் அயாகோவிடம் கேட்டதற்கு, "அரசக் குடும்பத்தின் எண்ணிக்கை குறைந்து வருவது உண்மைதான். ஆனால் ஜப்பானின் சட்டப்படி இதற்கு தற்போது பதிலளிக்கும் இடத்தில் நான் இல்லை” என்று கூறினார்.

அயாகோ மற்றும் கி மோரியான் திருமணம் வரும் அக்டோம்பர் மாதம் நடைபெற இருப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT