உலகம்

ஜப்பானில் நிலச்சரிவு: 36 பேர் பலி: வீடுகள் சேற்றுக்குள் புதைந்தன

செய்திப்பிரிவு

ஜப்பான் ஹிரோஷிமா மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேற்றுக்குள் புதைந்தன. இதில், 36 பேர் பலியாகியுள்ளனர். 10 பேரின் நிலை என்னவாயிற்று எனத் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஹிரோஷிமா மலைப்பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, மலையடிவாரப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. பெரிய கற்களும், வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களும் சரிந்து விழுந்தன.

அப்போது, ஏராளமான வீடுகளை சேறும் சகதியும் மூடின. சில வீடுகள் முழுமையாக சிதைக்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டன. சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் கூறும்போது, “பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்கள் உயிருடன் புதைந்துள்ளனர். 10 பேரின் நிலை தெரியவில்லை. எனவே, உயிரிழப்பு குறித்த துல்லியமான விவரத்தை தற்போது தர இயலாது” என்றார்.

53 வயதான ஒரு நபர், நிலச்சரிவு ஏற்பட்டதும் சேற்றில் புதைந்த 5 பேரை பத்திரமாக உயிருடன் மீட்டார். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட போது, இரண்டாவதாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்தப்பிய ஒரு பெண் கூறும்போது, “ சம்பவம் நடந்த போது, நான் வீட்டில் நடுப்பகுதியில் நின்று கொண்டிருந்தேன். திடீரென என் இருபுறத்திலும் இருந்த சுவர்கள் இடிந்து விட்டன” என்றார்.

          
SCROLL FOR NEXT