உலகம்

இராக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து 2 நகரங்கள் மீட்பு

செய்திப்பிரிவு

இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி படைகளின் முகாம்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இந்த தாக்குதல் மாதக்கணக்கில் நீடிக்கும் என்று பென்டகன் அறிவித்துள்ளது.

இராக்கில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தும் என்று அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா அண்மையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க போர் விமானங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில நாள்களாக நீடிக்கும் இந்தத் தாக்குதல் திங்கள் கிழமையும் தொடர்ந்தது.

அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இர்பில் நகரில் குண்டுகளை வீசின. இதில் பலர் உயிரிழந்ததாகவும் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்நாட்டுப் போர் காரணமாக வடக்குப் பிராந்திய மலைப் பகுதி களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு அமெரிக்க ராணுவத் தின் சரக்கு விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களும் குடிநீர் பாட்டீல்களும் வீசப்பட்டன.

அமெரிக்க ராணுவ உதவியுடன் கிளர்ச்சிப் படைகள் பிடியில் சிக்கியிருந்த சுமார் 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக இராக் அரசு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்து படைகளும் போரிட்டு வருகின்றன. கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்த மாக்மூர், கெவர் ஆகிய நகரங்களை அந்தப் படைகள் மீட்டுள்ளன.

பிரான்ஸ் ஆயுத உதவி

இதனிடையே இராக்கின் குர்து படைகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் கூறியபோது, குர்து படைகள் தங்கள் பகுதியை தற்காத்துக் கொள்ள அதிநவீன ஆயுதங்கள் வழங்க பரிசீலித்து வருகிறோம். இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

பிரதமர் மாலிக்குக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு

இராக்கில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் நூரி அல் மாலிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு, கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த நாட்டு அதிபர் புவத் மாஸு அதிகாரபூர்வமாக மாலிக்கை பிரதமராக அறிவிக்கவில்லை. மாலிக்குக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்யுமாறு நாடாளுமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை எதிர்த்து மாலிக் தரப்பில் இராக் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாலிக்குக்கு ஆதரவாக திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் முழுவிவரம் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரத்தால் தலைநகர் பாக்தாதில் போலீஸார், ராணுவம், தீவிரவாத எதிர்ப்புப் படை என பெரும் எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியபோது, நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் பிரதமரும் அதிபரும் சுமுக உடன்பாடு காண வேண்டும். இந்த விவகாரத்தில் உதவி செய்ய அமெரிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவ உதவியுடன் கிளர்ச்சிப் படைகள் பிடியில் சிக்கியிருந்த சுமார் 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக இராக் அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT