பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவின் படுகொலை, தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலாக பார்க்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்த செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே என்பவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்த காட்சிகளோடு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை தகவல் எனக் குறிப்பிடப்பட்ட வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட வீடியோ பதிவு குறித்து அமெரிக்க அரசு தரப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த படுகொலையை அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதலாக அறிவிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இராக்கின் தியாலா மாகணத்தில் பகுபா என்ற நகரத்தில் நேற்று இரவு மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சன்னி இஸ்லாமிய மக்களை நோக்கி ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், சம்பவத்தில் 70 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறும்போது, "போலே படுகொலை அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
அந்த அமைப்பு தங்களது கோரிக்கைகளை நிரைவேற்ற பல உயிர்களை பறித்திவிட்டது. இது அவர்களின் கொள்கை குறைபாடு" என்றார்.
அமெரிக்க பத்திரிகையாளர் போலேவின் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட செயல் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், இராக்கில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை. மக்களைக் காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.