ஏமனில் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருக்கும் ஹோடிடா துறைமுகத்தை மீட்க அரசுப் படைகள் கடுமையான போரை தொடுத்து வருகின்றன.
தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இந்த நிலையில் சவுதிப் படைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹவுத்தி தீவிரவாதிகள் இருப்பிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தின. மேலும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஹோடைடா துறைமுகத்தை கைப்பற்ற அரசுப்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
மேலும் சவுதிப் படைகள் மற்றும் ஏமன் அரசுப் படைகள் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் கடந்த நான்கு நாட்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏமனில் உள் நாட்டுப் போர் தொடங்கிய 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 8,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 60% பேர் பொதுமக்கள் என்று ஐக்கிய நாடுகளின் சபை கூறியுள்ளது.