அதிவேக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் சீனா வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கப்பல் தயாரானால், அதன் மூலம் ஷங்காய் முதல் சான் பிரான்சிஸ்கோ வரையிலான 9,900 கி.மீ., தூரத்தை இரண்டு மணி நேரங்களுக்குக் குறைவான நேரத்தில் அடையமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹார்பின் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த லீ ஃபெங்சன் எனும் ஆய்வாளர் கூறியதாவது:
"நீருக்கடியில் குமிழிகளை ஏற்படுத்துவதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பலின் வேகத்தை அதிகரிக்க முடியும். பனிப் போர் காலகட்டத்தில் அன்றைய சோவியத் யூனியன் 'சூப்பர்கேவிடேஷன்' எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இதன்மூலம் நீர்மூழ்கியைச் சுற்றிலும் நீர்க்குமிழிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அந்த நீர்மூழ்கியின் வேகம் அதிகரிக்கப்படும்.
கிட்டத்தட்ட இதேபோன்ற தொழில்நுட்பத்தில் வேறு சில மாற்றங்களையும் ஏற்படுத்தி நீர்மூழ்கிக் கப்பலின் வேகத்தை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம். நீர்மூழ்கிக் கப்பல் 75 கி.மீ.வேகத்தை அடைந்தவுடன் அது தானாகவே 'சூப்பர்கேவிடேஷன்' நிலைக்குச் சென்றுவிடும். பிறகு அது அதிவேகத்தில் பறக்கும்" என்றார்.