ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகள் தான் தனது காதலியோடு தெருவோரம் வசிப்பதாகவும், தனக்கு உதவி வேண்டும் என்றும் தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
ஜாக்கிசானின் 18 வயது மகளான எட்டா தனது காதலி (ஓரினச் சேர்க்கையாளர்கள்) ஹேண்டி ஹாட்டம் உடன் இருக்கும் வீடியோ ஒன்றை யூ டியூபில் வெளியிட்டிருக்கிறார். அதில், ''எனது பெற்றோர்கள் எனது நிலைக்குக் காரணம். நாங்கள் வீடு இல்லாமல் ஒரு மாதத்துக்கு மேலாக தவித்து வருகிறோம்.
நாங்கள் பாலங்களின் அடியிலும், மற்ற தெருவோரங்களிலும் வசித்து வருகிறோம். நாங்கள் போலீஸார், மருத்துவமனை, எல்ஜிபிடி அமைப்புகள் என அனைவரிடமும் உதவி கேட்டோம். ஆனால், யாரும் எங்களுக்கு உதவிக்கு வரவில்லை. இந்த நிலைமையிலும் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அதனால்தான் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன்'' என்று எட்டா தெரிவித்துள்ளார்.
எட்டாவின் இந்தக் குற்றச்சாட்டை அவரது தாய் எலைன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் கூறும்போது, "அவர்களுக்கு பணம் இல்லை என்றால் வேலைக்கு செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.