ஐ.நா. விசாரணைக் குழுவினருக்கு விசா வழங்கப்படாது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40,000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. உயர்நிலைக் குழு விசாரணை நடத்த கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இலங்கையில் விசாரணை நடத்த ஐ.நா. உயர்நிலைக் குழுவினர் தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அந்த நாட்டு அதிபர் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
ஐ.நா. சபையின் அனைத்து துறைகளுக்கும் இலங்கை அரசு முழுஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஆனால் ஐ.நா. மனித உரிமை கமிஷன் விசாரணையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இலங்கையில் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் ஐ.நா. குழுவினருக்கு விசா வழங்கப்படாது.
போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நிபுணர்கள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த 2 நிபுணர்களும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் தங்கள் விசாரணையை நிறைவு செய்ய மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போர்க் குற்ற விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனும் இதர தலைவர்களும் இலங்கை அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.