உலகம்

எபோலா பரவலைத் தடுக்க விரைவு நடவடிக்கை: உலக நாடுகளுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

எபோலா வைரஸ் குறித்த அச்சத்தைத் தவிர்த்து, அந்த நோய் பரவுவதை தடுக்க உலக நாடுகள் விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வைரஸ் நோயை தடுப்பதற்காக ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளாராக இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் நாபேரா என்ற மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன், "எபோலா வைரஸ் பரவமால் தடுக்க முடியும் என்பதால் அதுகுறித்து பீதியடையத் தேவையில்லை.

தற்போது அச்சத்தை தவிர்த்து, எபோலாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே அதிகப்படுத்த வேண்டும். கினியா, லைபீரியா, சியரா லியொன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை தீர்க்க வழி செய்ய வேண்டும்.

பற்றாக்குறையை தீர்க்க ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கலாம்.

போதுமான விழிப்புணர்வு, நோய்த் தொற்று குறித்த அறிவு, ஆரம்ப நிலையிலான நடவடிக்கை மூலம் நோயை தடுத்து விட முடியும்" என்றார் பான் கி மூன்.

கடந்த 2013- ஆம் ஆண்டில் கினியாவில் ஏற்பட்ட எபோலா நோய் மெல்ல மெல்ல பரவி லைபீரியா, நைஜீரியா, சிரியா லியோன் ஆகிய நாடுகளில் தற்போது தீவிர அச்சத்தை நிலவ செய்துள்ளது. இதுவரை நோய் தாக்கி 1,013 பேர் பலியாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT